கம்மவார்கள் ஒருங்கிணைந்த விஜயநகர தேசத்தில் பரவிவாழத் தொடங்கினர். அக்காலத்தில் இன்றைய தமிழகம், ஆந்திரம், தெலங்காணம், கர்நாடகம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பெருந்தேசமாக விளங்கியது விஜயநகர சாம்ராஜ்ஜியம். எனவே, கம்மவார்கள் ஏறக்குறைய தென்னிந்தியா முழுதும் வாழ்ந்தனர். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் கம்மவார்களின் பங்கு முதன்மையானதாக இருந்தது. லட்சக்கணக்கான கம்ம வீரர்களைக் கொண்ட பெம்மசானி கம்ம வம்சத்தின் போர்ச்சேனை விஜயநகரத்திற்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தது. விஜயநகரத்தின் ஆணிவேர்களாகத் திகழ்ந்த கம்மவார்கள், தெற்கு நோக்கிப் பரவத்தொடங்கினர். அது, விஜயநகரப் பெரும்படை மதுரை பாண்டிய அரசைச் சேர்ந்த போர்க்குடிகளின் உதவியுடன், தமிழ்நிலத்தை அடிமைப்படுத்திய கில்ஜி சேனையை வென்று விரட்டிய காலமாகும். அப்பொழுது, மதுரையை உள்ளடக்கிய நிலப்பரப்புகள் விஜயநகர தேசத்துடன் சேர்க்கப்பட்டது. அப்பொழுது நாட்டின் தென்பகுதியை நோக்கி நகர்ந்த கம்மவார்கள், வேளாண்மையை செய்யத்தொடங்கினர். ஏற்கனவே பல ராஜ்ஜியங்களை ஆண்ட கம்மவார்கள், விவசாயம் செய்து அமைதியாக வாழவிரும்பினர். ஆதிக்கவெறி இல்லாத மேற்குடிகளான கம்மவார்கள், யாருடைய நிலங்களையும் அபகரிக்க முற்படவில்லை. தமிழக வேளாண்குடிகள் வழக்கம்போலவே, தங்கள் ஆளுமைக்கு உட்பட்ட நிலங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்து வேளாண்மை செய்தனர். தொன்றுதொட்ட விவசாய நிலங்கள் தமிழக வேளாளர்களிடமே இருந்தன. உதாரணமாக கொங்கு வேளாளர்கள், சோழிய வேளாளர்கள், நாஞ்சில் வேளாளர்கள் ஆகியோர் நாயக்கர் ஆட்சியிலும் சரி, வெள்ளையர் ஆட்சியிலும் சரி, நிலவுடைமையாளர்களாக வேளாண்மை செலுத்திவந்ததைக் காணலாம். கம்மவார்கள், உழவு செய்யப்படாத, வளமற்ற நிலங்களில் குடியேறினர். அவற்றைத் தங்கள் கடின உழைப்பால் திருத்தி விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மாற்றினர். பின்பு அந்நிலங்களில் புதியமுறையில் தங்களின் தனித்துவம்கொண்ட வேளாண்மையை மேற்கொண்டு வெற்றிகண்டனர். எப்படிப்பட்ட நிலத்தையும் விளைச்சல் பூமியாக மாற்றும் திறன் கம்மவார்களுக்கு இருந்ததால், தென்னகத்தில் பல இடங்கள் வேளாண்பூமிகளாக மாறின. கம்மநாட்டிலும் இவர்கள் விவசாயத்தில் மேலோங்கியவர்கள் ஆவர். இதைப்பற்றிய பழமொழியும்கூட வழக்கில் உண்டு. "கம்மவாரிகி பூமி பயபடுதுந்தி." - கம்மவார்களுக்கு நிலம் அஞ்சுகிறது, அவர்கள் சொன்னபடி நடக்கிறது. முக்கியமாக கரிசல்நில விவசாயம் இவர்களின் தனிச்சிறப்பாகும். ஆரம்ப காலத்தில் நிலங்களைச் சீர்செய்து விளைநிலங்களாக்கிய இவர்கள், தாங்கள் மட்டுமே உழுது, விதைத்து, உரம்போட்டு, நீர்பாய்ச்சி, களைநீக்கி, அறுவடைசெய்து வேளாண்மை செலுத்திவந்தனர். பின்பு, பழந்தமிழ் வேளாளர்களிடம் பணிபுரிந்துவந்த பள்ளர்களையும் தங்கள் நிலத்தில் பணிக்குவைத்து வேளாண்மை செய்தனர். பருத்தி விளைச்சலில் தமிழக கம்மவார்கள் கைதேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment