கம்மவார் - ஆதியும் பெயர்க்காரணமும்


கம்மவார் என்ற பெயர் எப்படி வந்தது?

கம்மநாட்டைச் சேர்ந்தவர்கள் :

தற்போதைய ஆந்திர மாநிலத்தில் (அப்பொழுது மொழிவாரியான மாநிலங்களோ, நாடுகளோ இல்லை. ராஜ்ஜிய மாற்றங்களுக்கு ஏற்ப நாடுகளின் எல்லைகள், பெயர்கள், அரசர்கள், மொழிகளின் பங்கு, தலைநகரங்கள், சமயங்கள் ஆகியன மாறும்.) உள்ள குண்டூரு, பிரகாசம் மற்றும் அவற்றுடன் சேர்ந்த பகுதிகளில் இந்து சமயமங்களுள் ஒன்றான பௌத்தம் பரவி வளரப்பெற்றது. அங்கு வாழ்ந்த போர்க்குடி மக்கள் பெருமளவில் விவசாயம் செய்யும் காபுகளாகத் (காபு என்றால் பொதுவாக விவசாயகுடிகளை அழைக்கப் பயன்பட்ட சொல். இன்றைய காபு சாதியைக் கொண்டு குழம்ப வேண்டாம்.) திகழ்ந்தனர். அவர்கள் கம்மா என்ற பௌத்த தத்துவத்தை கடுமையாக பின்பற்றினர். எனவே, அந்த பகுதிகள் தொகுக்கப்பட்டு கம்மநாடு என்று அழைக்கப்பெற்றது. கம்மநாட்டில் வாழ்ந்த அந்த மக்களும் கம்மவாரு (கம்மவார்) என்று அழைக்கப்பெற்றனர். கம்மநாட்டில் வாழ்ந்த பிற சமூக மக்களும் கம்ம என்ற பெயருடன் அவர்களின் குலப்பெயரைச் சேர்த்து அழைக்கப்பெற்றனர். கம்ம பிராமணர், கம்ம கோமடி எனப்படும் வைசியர் (வியாபார சமூகம்) ஆகியோரும் கம்மநாட்டைச் சேர்ந்தவர்களே. ஆனால் அவர்கள் போர்புரியும் விவசாயகுடி அல்லாதவர்கள். கம்ம நாட்டைச் சேர்ந்த கம்ம காபு இன மக்களே பின்னாளில் கம்மவார்கள் என்று அறியப்பட்டனர். இன்று கம்மவார்களைக் குறிக்க, கம்மா, கம்மவாரு, கம்ம நாயுடு, சௌதரி, நாயக்கர் என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பட்டங்களும் பல உள்ளன. எந்த பட்டத்தைப் பயன்படுத்தினாலும், கம்மவார் என்ற அடையாளத்துடனே வாழ்கின்றனர். இவர்கள் தென்னிந்தியாவில் அதிக மக்கள்தொகைகொண்டு பரவி வாழ்கின்றனர்.

இதுவே, நடைமுறையில், நிரூபிக்கப்பட்ட, ஆதாரப்பூர்வமான, புவியியல் ரீதியான, யதார்த்த உண்மை. இதுபோன்றே, கம்மநாட்டிற்கு அருகே பல்நாடு, வெலநாடு போன்ற நாடுகளும் இருந்தன. உதா: பல்நாட்டு பிரம்மநாயுடு, வெலநாட்டு சோழர்கள் ஆகியோர் முறையே பல்நாடு மற்றும் வெலநாடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நாட்டுப்புறக் கதைகள் (ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டவை) :

லக்ஷ்மிதேவி அருளி தோற்றுவித்த ஆயுதவீரர்கள் :
முன்னொரு காலத்தில், ரிஷிகள் ராக்ஷசர்களால் மிகவும் கொடிய துயரங்களுக்கு ஆளாகினர். அவர்கள் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு லக்ஷ்மிதேவியைச் சுட்டினார். லக்ஷ்மிதேவி தன் ஒரு கம்மலைக் கொண்ட கூடையை ரிஷிகளுக்கு அளித்து, அவர்களை நூறுவருடங்கள் அதைவைத்து பூஜித்து வழிபடுமாறு உத்தரவிட்டாள். இறுதியில், அக்கூடையிலிருந்து ஐநூறு ஆயுதமேந்திய வீரர்கள் உதித்தனர். அவர்கள், ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி, ராக்ஷசர்களைத் தாக்கி முழுவதுமாக அழித்தனர். பின்னர், சத்ரியர்களாக அங்கீகரிக்கப்பட்டு, பரந்த நிலங்கள் வழங்கப்பெற்று, விவசாயம் செய்து செழித்து வாழும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

பரிசத்து மஹாராஜா வம்ச கதை :
அந்த காலத்தில் இவர்கள் போர் புரியும் சத்ரியர்களாக மட்டுமே இருந்துள்ளனர். பின்பு இந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர், பரிசத்து மஹாராஜா வழிவந்த மன்னர் ஒருவரை, தரக்குறைவாக வசைபாடியுள்ளார். இதனால் கோபமடைந்த மன்னர், இவர்களை நாடு கடத்தியுள்ளார். எனவே, விவசாய காபுகள் இருக்கும் இடத்திற்கு வருகின்றனர். ஆதலால், தங்கள் சத்ரிய தொழிலை கைவிட்டு, காபுகளாக மாறி விவசாயம் செய்யத் தொடங்கினர்.

பெல்தி ரெட்டி கதை :
முன்னொரு காலத்தில் பெல்தி ரெட்டி (ரெட்டி என்றால் அக்காலத்தில் ஊர்த்தலைவர் முதலானோருக்கு வழங்கப்படும் பட்டம். இன்றைய ரெட்டி சாதியைக் கொண்டு குழம்ப வேண்டாம்.) என்ற மன்னர் இருந்தார். அவருக்கு பல மனைவிகள் இருந்தனர். அவர்களுள் தனக்கு மிகவும் பிடித்த ஒருத்தியை மட்டும் ராணியாக்கினார். அதைக்கண்ட மற்ற மனைவிகளுக்கு பொறாமை உணர்வுகள் எழுந்தன. எனவே, தங்கள் புதல்வர்களை தூண்டிவிட்டு, ராணியின் நகைகளைத் திருடச் செய்கின்றனர். அவர்கள் இறுதியில் மன்னரால் பிடிபட்டுவிடுகின்றனர். ராணியின் நகையை (கம்மல்) மீட்ட புதல்வர்கள் கம்மவார் என்றும், விட்டு ஓடிச்சென்றவர்கள் வெலமவார் என்றும் அழைக்கப்பட்டனர்.

பிரதாப ருத்ரரின் கம்மல் கதை :
காகதீய மன்னர் பிரதாப ருத்ரரின் கம்மல் எதிரிகளால் கைப்பற்றப்பட்டது. அப்போது காபுகளில் ஒரு பிரிவினர், வீரமாக சென்று, எதிரிகளைத் தாக்கி, கம்மலை மீட்டுவந்தனர். அவர்களின் வாரிசுகளே கம்மவார்கள். தப்பிச் சென்றவர்களின் வாரிசுகளே வெலமவார்கள்.

பிரதாப ருத்ரரின் மனைவியின் கம்மல் கதை :
ஒருமுறை பிரதாப ருத்ரரின் மனைவியாரின் கம்மல் தொலைந்துவிட்டது. அப்போது அதைக் கண்டுபிடிக்க நான்கு தளபதிகள் சென்றனர். ஒருவர் (கம்மவார்) கம்மலை மீட்டார். இரண்டாமவர் (வெலமவார்) எதிரிகளைத் தாக்கினார். மூன்றாமவர் (பாகநாட்டு காபு) தப்பி ஓடிவிட்டார். நான்காமவர் மறைந்துவிட்டார்.

இந்த நாட்டுப்புற செவிவழிக் கதைகள் ஆங்கிலேய வரலாற்றுப் பதிவாளர்களான எட்கர் தர்ஸ்டன் மற்றும் சிந்தியா தல்போட் ஆகியோரின் நூல்களில் பதியப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment